நெல்லை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், அலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், சிக்னல் விதிகளை மீறுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகரத்தில் 4052 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ததில் 4052 வழக்குகளின் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், அலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், சிக்னல் விதிகளை மீறுதல் ஆகிய குற்றங்களின் கீழ் 563 வழக்குகளின் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கும் மற்றும் கூடுதலாக தலைகவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல் குற்றத்தின் கீழ் 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்கும் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பரிந்துரை செய்துள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றார் அவர் பொறுப்பேற்றது முதல் நெல்லை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.