தென்காசி மாவட்டம் ஆலங்குளம் TPV மல்டி பிளக்ஸ் திரையரங்கில் திரைப்பட நடிகர் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் 25 வது நாளாக வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ராமராஜன் ஆலங்குளம் திரையரங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு ராமராஜன் ரசிகர் மன்றத்தினர், கிராமப்புற பெண் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வெடி வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது ஆர்வமிகுதியில் ரசிகர் ஒருவர் ராமராஜனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசும் போது,
தற்போது மக்கள் திரையரங்கிற்கு வருவதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தனது படத்திற்கு பெண்கள் சாரை சாரையாக வருவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் டிக்கெட் கட்டணம் அதிக அளவில் இருப்பதால், ஏழை எளிய சாமானிய மக்கள் திரையரங்குகளுக்கு வர இயலாமல் போய் விடுகிறது. நாளையில் இருந்து ஆலங்குளம் TPV திரையரங்கில் 50 ரூ மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறினார். மக்களுக்கு உள்ள பொழுதுபோக்குகளில் முக்கியமானது சினிமா. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கட்டணத்தை குறைத்தால், ஏழை எளிய மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வருவார்கள். 35 வருடத்திற்கு பிறகும் கரகாட்டாக்காரன் படத்தில் உள்ள வரவேற்பு, தாய்மார்கள் மத்தியில் இன்றும் உள்ளது என்று பேசினார். அதனை தொடர்ந்து 25-வது நாள் விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி சாமானிய ரசிகர் ஒருவருக்கு கேக் ஊட்டினார். திரையரங்கு நிர்வாகத்தின் சார்பில் ராமராஜனுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன் கூறியதாவது,
சினிமா என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு. தியேட்டரில் 150 சீட்டுக்கு 50 ரூபாய் என வைக்கலாம். 50 ரூபாய் என்றால் சாமானிய மக்கள் எளிதாக வருவார்கள், உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கூடுதலாக வைக்கலாம். இதனை தமிழகம் முழுவதும் வைக்கலாம். அப்படி செய்தால் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பார்ப்பார்கள் என்றார். கரகாட்டக்காரன் படம் பார்த்த ஆடியன்ஸ் தற்போது இல்லை, அப்படி ஒரு மிகப்பெரிய படம் அமைந்ததை நினைந்து நான் மிகுந்த சந்தோஷப்படுகிறேன். சாமானியன் படத்தில் சில குறைகள் இருந்திருக்கலாம், ஏனென்றால் விளம்பரம் சரியாக பண்ணல. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆபரேஷன் சக்சஸ் என்று கூறிவிட்டு நோயாளியை கொன்று விட்டார்.
சாமானியன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் போதிய விளம்பரம் கொடுக்க முன்வரவில்லை. விளம்பரப்படுத்தினால் தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இல்லையென்றால் எப்படி வருவார்கள். அதனையும் மீறி வருவார்கள் என்றால் ராமராஜனுக்காக தான். அந்த காலத்தில் 100 நாள் படம் ஓடினால் பெரிய விசயம், ஆனால் இந்த காலம் 10 நாள் ஓடினாலே பெரிய விசயம். அப்படி மாறிவிட்டது. இந்த ராமராஜனை மக்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் இசைஞானி இளையராஜா தான் காரணம். இளையராஜாவை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. கரகாட்டக்காரன் மீண்டும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.