நெல்லை டவுண் வயல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (32), இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவரது குழந்தைகள் நெல்லை டவுண் பாரதியார் தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
சரமாரி அரிவாள் வெட்டு:
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வீடு திரும்ப முயற்சித்த போது அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை பள்ளி அருகேயே வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் கை, முகம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காயமடைந்த சக்தி இரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் கிழே சரிந்தார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த சக்தியை மீட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் நெல்லை டவுண் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன் அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமா?
குறிப்பாக இந்த சம்பவம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடைபெற்றதா? அல்லது குடும்ப பிரச்சனை ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை பள்ளிக்கு மாணவர்கள் அதிகம் வரும் வேளையில் பள்ளி அருகே நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தால் நெல்லை டவுண் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
குறிப்பாக அரிவாள் வெட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த சக்தி நெல்லை மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு வங்கி முன்னாள் சேர்மன் ஆகவும் தற்போதைய அமமுக பிரமுகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சக்தியின் தந்தையும் அரிவாளால் வெட்டப்பட்டு கையை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இது போன்று கொலை முயற்சி சம்பவங்கள் கொலைகள், திருட்டு போன்றவை அதிகரித்து வருகிறது. அதோடு வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்