சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, நரம்பியல் துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படும் நிலையில் 1500க்கு மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு சிறப்பான சிகிச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவன் கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மார்பின் இடது புறத்தில் ஆறு அங்குலம் நீளமான கத்திரிக்கோல் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். 30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை பணிகள் தொடங்கப்பட்டு 3 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இதில் இருதயத்தின் தமனி பகுதியில் ஓட்டை விழுந்திருந்ததால் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்து வெற்றிகரமாக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிறுவனின் உயிரை காப்பாற்றி உள்ளனர். தற்போது அவர் பள்ளி செல்லும் அளவில் தேறி உள்ளார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மேலும் மற்றொரு சாதனையாக மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவனுக்கு குடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக கணையம் பகுதியில் சீல் வைத்ததால் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யமால் மருத்துவ வளர்ச்சி நவீன உபகரணங்கள் நமது மருத்துவமனையில் இருப்பதன் காரணமாக என்டாஸ்கோபி முறையில் Stent பொறுத்தி 15 நிமிடங்களில் குடல் சலத்தை அகற்றி உள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மருத்துவமனையில் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இந்த இரண்டு சாதனைகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்த அவர், மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளை திரையிட்டு அது குறித்து விவரித்து கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிகிச்சை பெற்ற சிறுவன் மற்றும் குடும்பத்தினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.