நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கால்நடை சந்தை.  நெல்லை மாநகரில் மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை விற்பனையானது மிகவும் மும்மரமாக நடைபெறும். குறிப்பாக நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என  நெல்லையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். குறிப்பாக பண்டிகை காலம் என்றாலே இந்த சந்தை நிறைந்து மக்கள் கூட்டமாகவே காணப்படும். இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் இந்த சந்தையில் இன்று கூட்டம் அலைமோதி காணப்பட்டது.




 


தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும், அசைவ உணவுகள் சமைத்தும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். அசைவ உணவுகள் அன்று பலரின் வீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இன்றே மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக சிறிய குட்டி ஆடு 3000 ரூபாய் முதல் பெரிய ஆடு 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபரிகள் இன்று காலையிலிருந்து இந்த கால்நடை சந்தையில் குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான கால்நடைகளை தேர்வு செய்து வாங்கினர். இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இங்கு கால்நடைகள் விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.




இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறும் போது, “இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் வியாபாரமும் கொஞ்சம் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆடுகளை மிகக் குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்கிறார்கள். இதனால் காலை முதலே நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். இதே போல ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது, இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் விலையும் அதிகமாக உள்ளது. அதனால் நல்ல ஆடுகளை பார்த்து வாங்குவதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக சிறிய ஆட்டுக்குட்டி 3000 ரூபாய் முதல் பெரிய ஆடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது” என தெரிவித்தார்.  நெருங்கி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை களைகட்டியுள்ளது வியாபாரிகளிடையே மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண