தூத்துக்குடி மாவட்டத்தில் 6148 பேருக்கு விபத்து நேரத்தில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை பற்றிய சிறு பயிற்சி வழங்கி சாதனை படைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.




தூத்துக்குடி தருவை மைதானத்தில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற மாபெரும் முதலுதவி பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , மாநகராட்சி ஆணையர் ஆகியோர் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து செயல்முறை பயிற்சியினை பார்வையிட்டு பேசும்போது, விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் இன்று பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் கிராமப்புற மருத்துவமனைகளில் கூட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமாக மேம்படுத்தப்பட்டு உயிர் காக்கும் சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றன.




தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த அற்புதமான திட்டம் நம்மை காக்கும் - 48 இன்னுயிர் காப்போம் திட்டம். இத்திட்டத்தின் படி எந்த வகையான விபத்துக் காயங்களுக்கும் முதல் 48 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மற்றும் மேல் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். தமிழக அரசின் இந்த முயற்சிகளை  மக்களிடையே எடுத்து செல்லவும், விபத்து தடுப்பு முறைகளை மக்களிடையே பிரபல படுத்தவும், சாலை விதிகளின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 17 - ம் தேதி உலக விபத்து மற்றும் காய தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விபத்து நேரத்தில் செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய சிறு பயிற்சியை 5000 மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுநல தன்னார்வலர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் 5000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.




அதனைத்தொடர்ந்து, தருவை மைதானத்தில் சாரண சாரணியர், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாநராட்சி, உள்ளாட்சி, துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 6148 பேர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் ஒருவர் சாலை விபத்து ஏற்பட்டு விபத்துக்குள்ளானால் அவரை கடந்து செல்லாமல் நாம் ஒவ்வொருவரும் தன்னலமற்ற மனப்பான்மையோடு விபத்துக்குள்ளானவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு முதலுதவி அளிப்பவர்களிடம் எந்தவொரு விசாரணை செய்யக்கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே நாம் தயங்காமல் முதலுதவி செய்யலாம்.




நாம் முதலுதவி செய்யும் போது முதலில் விபத்துக்குள்ளானவர்களுக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. உடம்பு அசைவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாசம் இருந்தால் அவர்களுக்கு இதய துடிப்பை சீராக்குவதற்கு இதயத்தில் 30 தடவை அழுத்தம் கொடுக்க வேண்டும். சுவாசம் இல்லாத பட்சத்தில் வாய் மூலமாக காற்று கொடுக்க வேண்டும். குறிப்பாக 3 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த முதலுதவியை செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக விபத்து ஏற்பட்டதை கண்டவுடன் 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்திட வேண்டும். பின்னர் மருத்துவ மனைக்கு அனுப்பிவைப்பதன் மூலம் நம்மால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும். எனவே நம் வாழ்நாளில் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை எடுத்துக்கொள்ள வேண்டும்.




கடந்த மாதம் கோயம்புத்தூரில் பங்கேற்ற பயிற்சியாளர்களைவிட தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவாக 6148 பேருக்கு விபத்து நேரத்தில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை பற்றிய சிறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைவிட நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மேலும், விபத்து தடுப்பு விழிப்புணர்வு பற்றிய குறும்படம், விபத்தில் உதவும் நல் இதய  மனிதர்களுக்கு ஊக்கத்தொகை 5000 ரூபாய் வழங்குவது  பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. இப்பயிற்சி முகாமில் உலக விபத்து மற்றும் காய தடுப்பு தினத்தையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு அப்போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக உலக விபத்து மற்றும் காய தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.