நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் ராஜ், இவரது மனைவி ஆஷா. இவர் பணகுடி பேரூராட்சியின் 15 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். பணகுடிக்கு அருகே புறவழிச் சாலையில் அரசு டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் குடிப்பதற்காக நேற்று மாலை ராஜ் சென்றுள்ளார்.

  அப்போது உரிய பணத்தை கொடுத்து மது வாங்காமல் ஓசியில் கேட்டுள்ளதாக தெரிகிறது. பார் ஊழியர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.  இதனால் கோபமடைந்த ராஜ் கவுன்சிலரான எனக்கு மது கொடுக்க மாட்டாயா? எங்க ஆட்சியிலே மது கொடுக்க மாட்டாயா எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.  


மேலும் ஓசியில் மது கிடைக்காத நிலையில் டாஸ்மாக் பாரில் உள்ள சேர்களை உடைத்து நொறுக்கியுள்ளார். இதனால் அங்கு ஏற்கனவே குடித்து கொண்டு இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து பார் உரிமையாளர் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கைப்பற்றிய போலிசார் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜ் பாரில் உள்ள சேர், டேபிள் போன்றவற்றை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக கவுன்சிலரின் கணவர் டாஸ்மாக் பாரில் ஓசியில் மது கேட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.