நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதன்படி கடந்த டிச 17,18 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வீடுகள், சாலைகள் என பெரும்பாலான பகுதிகள் சேதமானது, குறிப்பாக மலைப்பகுதியான மாஞ்சோலை பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மேலும் மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் மலை பாதை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் மாஞ்சோலை செல்லும் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடுமையான மழையால் மேலும் மிகக்கடுமையாக சேதமடைந்ததால் அப்போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இதனால் கடந்த டிசம்பர் 17 -ந் தேதி முதல் மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 




இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சென்று வந்தனர். குறிப்பாக அந்த வாகனத்தில் 150 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்வதால் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதாக அங்குள்ள மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். எனவே சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து புகார் சென்றதை தொடர்ந்து நேரில் பார்வையிட்ட சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வனத்துறை வாகனத்தில் 25 முதல் 35 ரூபாய் வரை வாங்கப்படும் என கூறிச் சென்றார்.  அதன் பின் வனத்துறை வாகனமும் பழுதடைந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர்  மாவட்ட நிர்வாகம் சார்பாக சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர், 




அதைத் தொடர்ந்து நேற்று முதல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை அம்பாசமுத்திரம் தாசில்தார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்  பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும், போக்குவரத்து சீராக சென்று வந்தால் வழக்கம் போல் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்...  இந்த நிலையில் மணல்களை போட்டு சரி செய்யப்பட்ட சாலையில் பேருந்து செல்லும் போது பேருந்தின் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் மீண்டும் இன்று அப்பகுதிக்கு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் எப்போது பேருந்து இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். அதோடு நிறுத்தப்பட்ட பேருந்து சேவையால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.