நெல்லை பாளையங்கோட்டை குலவணிக்கர்புரம் குறிச்சி மெயின் ரோட்டை சார்ந்தவர் சரோஜினி (வயது 48). இவர் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாதம் ரூபாய் 300/-  மருத்துவ காப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 02.09.2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 87% நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மருத்துவ சிகிச்சை கட்டணமாக ரூபாய் 7,34,066/- செலுத்தி உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் வழியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அதில் சிகிச்சைக்குரிய முழுத்தொகையையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.  அதன்பின் கருவூலக கணக்கு துறை காப்பீட்டு தொகை  வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 


இந்த  நிலையில் 26.09.22 அன்று ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் வங்கி கணக்கில் காப்பீடு நிறுவனம் வழங்கியுள்ளது. மீத தொகையான ரூபாய் 4,54,066/- கேட்டு பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய சரோஜினி வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதன்பின் அதிகமான வழக்குகள் இருந்ததால் இவரது வழக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின் அங்கு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த மதுரை மாவட்ட குறைதீர்க்கும் ஆணைய தலைவர் பிறவிப் பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் காப்பீடு நிறுவனம் செய்த முறையற்ற வாணிபம் சேவைகுறைப்பாடு என்பதால் ரூபாய் 4,54,066/-  வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூபாய் 25000/-ம், வழக்குச் செலவு ரூபாய் 5000/- சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உத்தரவு பிறப்பித்த 45 நாட்களுக்குள் இந்த தொகையினை நுகர்வோரான சரோஜினிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் இல்லையெனில் 9% வட்டியுடன்  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.