நெல்லை சிந்துபூந்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் 27.02.2022 அன்று இரவு பார்சல் புரோட்டா, நெய்ரோஸ்ட் மற்றும் மஸ்ரூம் தோசை ஆகிய உணவு கேட்டு ரூபாய் 484 செலுத்தியுள்ளார். அதற்குரிய ரசீதும் பெற்றுள்ளார்.


இரவு உணவில் அலட்சியம்:


ஆனால் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தனியார் ஹோட்டல் பார்சல் வழங்காமல் இருந்துள்ளது. சிவசுப்பிரமணியன் நாகர்கோவிலில் இருந்து  ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய பேருந்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  மேலும் இரவு உணவுக்காக தனியார் ஹோட்டல் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் ஆர்டர் செய்த உணவானது வேறு நபருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் இட்லி மற்றும் தோசை மட்டுமே உள்ளது. அதனால் உடனே மனுதாரருக்கு பார்சல் தர இயலாது என்று தெரிவித்துள்ளனர்.


இரவு முழுவதும் பட்டினி:


சிவசுப்பிரமணியன் பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் தான் செலுத்திய பணத்தினை திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுப்பதற்கு தனியார் ஹோட்டல் மறுத்து விட்டது. மேலும் சிவசுப்பிரமணியிடம் கொடுக்கப்பட்ட ரசீதில் உணவு டெலிவரி செய்தற்குரிய முத்திரையிடப்படவில்லை என்பதால் வேறு ஒரு நாளில் வந்து பார்சல் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட சிவசுப்பிரமணியம்  இரவு முழுவதும் சாப்பிட முடியாமல் பட்டினியாக ராமேஸ்வரம் சென்றுள்ளார்.


மன உளைச்சல் ஏற்பட்ட சிவ சுப்பிரமணியம் வழக்கறிஞர் பிரம்மா மூலம்  நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில்  வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர்  மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹5000 /- வழக்குச் செலவு ₹2000/-சேர்த்து மொத்தம்  ரூபாய் 7000த்தை தனியார் ஹோட்டல்  சிவ சுப்பிரமணியத்திற்கு வழங்க வேண்டும் எனவும், இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு  நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.