வழக்கின் தடயங்களும், காவல்துறை விசாரணையும்:


நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று மகன் கருத்தையா ஜெப்ரின் மறுநாள்  ஆம் தேதி க்உவரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். அதன்பின் 4 ஆம் தேதி ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட நாள் முதல் பல்வேறு தகவல்களும், அடுத்தத்தடுத்த தடயங்களும் வெளியாகி வருகிறது. இருப்பினும் தற்போது வரை துப்பு துலங்காத நிலையில் காவல்துறையினர் அடுத்தடுத்த நகர்வுகளில் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். முதலில் ஜெயக்குமார் எழுதியதாக கிடைக்கப்பெற்ற கடிதங்களை கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கிய  காவல்துறையினர் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்களையும், விடை தெரியாத கேள்விகளையும் வைத்து கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்து 5 நாட்களை கடந்தும் தற்போது வரை வழக்கை சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே விசாரித்து வருகின்றனர்.


ஊர்மக்கள் முன்வைக்கும் கேள்விகள்:


ஊரின் தொடக்கத்தில் உள்ளது ஜெயக்குமாரின் வீடு. ஊருக்குள் செல்பவர்கள் அனைவரும் அந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். குறிப்பாக ஊரில் ஆடு, மாடு, இருசக்கர வாகனம், நகை போன்றவை திருட்டு போனாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் என்றாலோ முதலில் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டு அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவது ஜெயக்குமாரின் வீட்டு சிசிடிவி கேமராவை தான். பல்வேறு வழக்குகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் 2 நாட்களாக வேலை செய்யவில்லை என்று சொல்வது மிகப்பெரிய கேள்விகளையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது? இதில் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். உண்மையாகவே வேலை செய்யவில்லையா? என்பதை காவல்துறை தான் விசாரித்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.


பெண்ணுடன் தொடர்பா??


ஜெயக்குமாருக்கும், களக்காட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதுகுறித்து ஜெயக்குமாரின் குடும்பத்தார் அவர்களை கண்டித்ததோடு மகன்களுக்கும் அவருக்குமிடையே இதற்கு முன் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜெயக்குமார் அடிக்கடி அப்பெண்ணுடன் பேசி வந்ததாகவும் கூறப்படும் நிலையில் அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 2 நாட்களாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் ஜெயக்குமாரின் குடும்பத்தார் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். குறிப்பாக ஜெயக்குமாரின் மகன்களிடம் கடந்த 2 நாட்களில் பலமுறை விசாரணையானது நடைபெற்றது. மேலும் நேற்றைய தினம் தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கேனை கொண்டு அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. முதலில் ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றி கிடைக்கும் தடயங்களை கொண்டு குடும்பத்தினர் விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.