தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் நெல்லை தாமிரபரணி ஆற்றில் சமீப காலமாக கழிவுநீர் கலப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாநகர பகுதிகளில் சரியான திட்டமிடல் இல்லாமல் போடப்பட்ட பாதாள சாக்கடையின் காரணமாக ஆங்காங்கே கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இது தவிர பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.




குறிப்பாக 1989ம் ஆண்டு பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் தற்போது வரை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாம் கட்ட பணிகளுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு 300 கோடி வரை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மாநகரில் உள்ள 55 வார்களில் சேகரிப்படும்  பாதாளச்சாக்கடை கழிவநீர் தச்சநல்லூர் ரயில்வே கிராசிங் அருகே பம்பிங் செய்யப்பட்டு பின் ராமையன்பட்டி குப்பை கிடங்கு சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சுத்தரிப்பு செய்யும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த திட்டம் கேள்விக்குறியாகும் வகையில் அனைத்து பாதாளச்சாக்கடை கழிவு நீரும் மணிமூர்த்தீஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருவி போல் பாய்ந்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நதி மாசடையும் சூழலும் உருவாகி உள்ளது.




இந்த நிலையில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணி மூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கழிவுநீர் கலப்பதை தடுக்க தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் ஆற்றுக்குள் கலக்கும் கழிவுநீர் ஓடை மீது அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் வந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் கழிவுநீர் மீது விளம்பர பேனர் விரித்து அதன் மீது அமர்ந்து மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  இது குறித்து சங்கர பாண்டியன் கூறும் பொழுது, நமது மாவட்டத்தில் பொறுப்பில்லாத சில அதிகாரிகளால் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து கிளை நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.  உடனடியாக இதனை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு ஆரோக்கியமான குடிநீரை வழங்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி் ஒருபுறம் சமூக ஆர்வலர்கள் சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் கழிவு நீர் ஓடை மீது அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண