நெல்லை மாநகரையடுத்த கேடிசி நகர் அருகே உள்ள கீழநத்தம் ஊராட்சி மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை. இவரது தாய் அரசம்மாள் வயது (70).  அண்ணாமலைக்கு திருமணம் முடிந்து அனிதா என்ற மனைவி இருக்கும் நிலையில் மாமியார் மருமகள் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மகனின் வீட்டிலேயே தனியாக ஒரு அறையில் தாய் அரசம்மாள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி அரசம்மாள் வீட்டின்  ஏணிப்படிக்கு கீழே விறகுகளில் தீ பற்றி எரிந்த நிலையில் அதில் சடலமாக கருகிய நிலையில் இருந்தார். இது குறித்து நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.


குறிப்பாக மூதாட்டி இறந்த அன்று மகன் அண்ணாமலையிடம் போலீசார் விசாரித்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட மூதாட்டி விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றது எவ்வாறு? அலறல் சத்தம் எதுவும் அருகில் இருந்தவர்களுக்கு கேட்காத சூழலில் மூதாட்டி தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுடன் விசாரணையை துவக்கினர்.




மகன் அண்ணாமலையிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணாமலையின் மனைவி அனிதா அரசம்மாளை துன்புறுத்தி வந்ததும், சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்ட போது தனது மனைவியுடன் சேர்ந்து தாயை தீர்த்து கட்ட இருவரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் திட்டமிட்டபடி வீட்டில் கிடந்த விறகில் தீ வைத்து, கடுகளவும் மனிதாபிமானமில்லாமல் வயதான மூதாட்டியான அரசம்மாளை தீக்குள் தள்ளி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தற்போது இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரையும் கைது செய்தனர்.  குடும்பப் பிரச்சனை மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக 70 வயது மூதாட்டியை ஈவு இரக்கமின்றி பெற்ற மகனே தனது மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண