நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெறும்.  அதன்படி 14-வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி, மணிமுத்தாறு, சிற்றாறு நதியின் 60 பாசன குளங்களில் இன்றும், நாளையும் அகஸ்தியமலை உயிர்கோள காப்பகம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆறு குழுக்களாக பிரிந்து நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களில் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதில் பறவைகளின் எச்சம், கால்தடம், கூடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் இந்த கணக்கெடுப்பு பணியின் போது பறவைகளின் இனம், கூடுகள், குஞ்சுகள் மற்றும் பறவைகளின் வகை என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. அதன் படி தொலை நோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் பறவைகளை இனம் கண்டு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.


நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியின் போது அதிக அளவில் நீர்காகம், சம்பு கோழி, சாம்பல் நாரை, பிளமிங்கோ, அல்லிக்குருவி போன்றவை காணப்படுவதாக கணக்கெடுப்பு பணியில் கலந்து கொண்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, நெல்லை மாநகரப் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய குளமான நயினார் குளத்தை சுற்றி இருக்கும் மருத மரம், இலுப்பை மரம், நீர்க்கடம்பை மரங்களில் பாம்பு தாரா வகை பறவைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகிறது. குறிப்பாக இந்த வகை மரங்களில் கூடுகட்டி பாம்புதாரா பறவைகள் குஞ்சு பொரித்து இருப்பதையும் காண முடிகிறது. அல்லி குருவிகள் குஞ்சுகளுடன் அதிகளவு இருப்பதையும் காணமுடிகிறது. இது தவிர ஐரோப்பியாவை சேர்ந்த ஆலா இன பறவைகளும், மன்கோலிய நாட்டை சார்ந்த வரிதலை வாத்தினங்களும் கணக்கெடுப்பில் அதிக அளவு காணபட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் நிலையில் உள் நாட்டு வெளிநாடு பறவைகள் குறித்த கணக்குகள் கிடைக்க பெறும். கடந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது 38 ஆயிரம் பறவைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. குளங்களை பொதுமக்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளாக மட்டும் பார்க்காமல் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதிகளாக பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு வைத்தனர்.