நெல்லையின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் செல்வதற்கு அதிக அளவில் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அனைத்து ரயில்களும் வந்து செல்லும் முக்கிய பகுதி என்பதால் பொதுமக்களின் கூட்டம் எப்பொழுதும் அதிக அளவிலேயே காணப்படும். இந்த சூழலில் நேற்று அதிகாலை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கு பயணிகளை இறக்கி விட்ட பிறகு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்தில் உள்ள மூன்றாவது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பிட்லைன் அருகே S3 பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து சற்று கீழே தடம் புரண்டது. இதனை சூதாரித்த இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில் நுட்ப ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜாக்கி உதவியுடன் தடம் புரண்ட S3 பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர மீட்பு பணிக்கு பின் ஜாக்கி உதவியுடன் தடம் புரண்ட S3 பெட்டியின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு ரயில் பிட்லைனுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து தாமதமானது. மேலும் ரயில் எவ்வாறு தடம் புரண்டது என்பது குறித்து அதிகாரிகள் அப்பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரையிலிருந்து ரயில்வே அதிகாரிகள் வந்து நேரடியாக விசாரணை நடத்தப் போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியான நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட பின் ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்