நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடத்தியம்மாள், வயது 86 இவருக்கு சொந்தமான நிலம் மானூர் பகுதியில் உள்ளது. சுமார் 31/2  ஏக்கர் விளை நிலத்தை நிலத்தின் உரிமையாளர் மாடத்தி அம்பாள் அழைத்து சென்று நிலத்திற்கு பட்டா வாங்கி தருவதாக கூறி இடத்தை மோசடி செய்த திமுக எம்பி மகன் சேவியர் செல்வராஜா மற்றும் சிலர் நிலத்தை பத்திர பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் எனவும் தெரிகிறது. இதனால் தனது நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய சம்பந்தப்பட்ட நெல்லை திமுக எம்பி ஞான திரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டி மாடத்தி அம்மாள் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயனிடம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வந்து மனு கொடுத்து வந்துள்ளனர்.


ஆனால் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துவிட்டு மாடத்தி அம்மாள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்துக்கு முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பெண் போலீசார் விரைந்து வந்து மாடத்தி அம்பாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். திடீரென மூதாட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  




இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாடத்தி அம்பாள் கூறும்போது, "எனது நிலத்தை மீட்டு தரச் சொல்லி நான் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டேன். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதோடு நிலத்தை மீட்டு தர வேண்டும்" என தெரிவித்தார்




தொடர்ந்து அவருடைய மருமகன் மார்க் கூறும்போது, "பட்டா மாற்றி தருகிறேன் என்று எங்களை அழைத்து சென்று பத்திரப்பதிவு அலுவலத்தில் எங்களிடம் கையெழுத்து வாங்கி விட்டனர். எந்த விவரமும் தெரியாததால் நாங்கள் அதில் ஏமாந்து கையெழுத்து போட்டு விட்டோம். 3 ஏக்கர் 56 சென்ட் எங்களது இடம், தொடர்ந்து நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து விட்டோம். காவல் நிலையத்திலும் புகார் அளித்தோம். நீதிமன்றம் வரை சென்றும் அவர்களுக்கு ஆதரவாக தான் இருக்கின்றனர், இதற்கு எந்தவித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை, எங்களது இடத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் ”என தெரிவித்தார்.


இதுகுறித்து புகார் கூறப்பட்ட எம்பியின் மகன் சேவியர் செல்வராஜிடம் கேட்டபோது, “பல வருடத்திற்கு முன்பே  முறைப்படி அவர்களிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது, இருப்பினும் வேண்டுமென்றே எங்களது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இது போன்று புகார் தெரிவித்து வருகின்றனர்” என  தெரிவித்தார்.