நெல்லை பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரம் சத்யா தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி பகவதி அம்மாள்(78). இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் தனது வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் அடுப்பில் தான் தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்றும் சமையல் செய்வதற்காக பகவதி அம்மாள் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்த போது அடுப்பு திடீரென தீ பற்றி உள்ளது. பின் பயங்கர சத்தத்துடன் அடுப்பானது வெடித்து சிதறியுள்ளது. இதில் தீயானது மூதாட்டியின் உடலில் பற்றி எரிந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கருகி உயிரிழந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டி தீயில் கருகிய நிலையில் கிடந்தார். உடனே அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் டேங்கில் காற்று அடித்தபோது அடுப்பு வெடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுப்பு வெடித்து தான் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும், மூதாட்டியின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து மூதாட்டி தீயில் கருகி பலியான சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.