நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மகன் இசக்கிராஜ். இவரது சகோதரி இசக்கியம்மாள். இந்த நிலையில் இசக்கிராஜன் தனது சகோதரி இசக்கியம்மாள் தாய் சரஸ்வதி மற்றும் இசக்கியம்மாளின் 2 வயது குழந்தை என நான்கு பேரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பாசமுத்திரம் பாபநாசம் சாலையில் கோடாரங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று இசக்கி்ராஜன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு வயது குழந்தை உள்பட நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இசக்கியம்மாள், சரஸ்வதி மற்றும் 2 வயது ஆண் குழந்தை சந்துரு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இசக்கிராஜனை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த இசக்கியம்மாளின் சகோதரி, சகோதரன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 




இதற்கிடையில் விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரியை விக்கிரமசிங்கபுரத்தை  சேர்ந்த அசோக் என்பவர் ஓட்டி வந்ததும், டிப்பர் லாரியின் முன்பக்க அச்சு முறிந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்த்திசையில் சாலையின் ஓரமாக வந்த இசக்கிராஜனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இசக்கிராஜனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததும், அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் குடும்பத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதே போல நேற்று நள்ளிரவிலும்  நெல்லை - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி அருகே கார் ஒன்று சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். அதேபோல் நேற்று மாலை கேடிசி நகர் அருகே நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். நெல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண