தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றத்தினை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர்,பவானி சுப்பராயன், ஜெகதீஸ் சந்திரா, இளங்கோவன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.




விழாவில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் பேசும்போது, ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நீதிமன்றம் 165 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஸ்ரீவைகுண்டம் சுற்றி நவதிருப்பதி ஸ்தலங்கள் உள்ளன. பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது பாராட்டுக்குரியது. வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு சிறந்த குடிமகனாக அறியப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.சுதந்திரப் போராட்ட தியாகிகளில் 90 சதவிகிதம் பேர் வழக்கறிஞராக இருந்தவர்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றால் அது வழக்கறிஞர்களால் மட்டும்தான் முடியும் என தெரிவித்தார்.




உயர்நீதிமன்ற நீதியரசர் வி.பவானி சுப்பராயன் தெரிவித்ததாவது, பெருமைமிகு முத்துநகரம் வணிகத்திற்கும், வாழ்க்கைக்கும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. நீங்கள் நீதிமன்றம் என்பது வெறும் கட்டிடம் என்று நினைப்பீர்கள். அதுவல்ல. அது 150 ஆண்டு கால பழங்கால காவியம். நீங்கள் வழக்கறிஞராகப் பணி செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்களது பணி சிறக்க மூத்தோர்கள் வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.இன்று நாம் திறந்து வைத்த சார்பு நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 33வது நீதிமன்றம் என்றார்.




உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா பேசும்போது, இந்த நீதிமன்றத்தைப் பொறுத்தவரையிலே 163 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நீதிமன்றம். ஸ்ரீவைகுண்டத்தைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆன்மீக பூமி என்று சொல்வார்கள். இங்கு பெரிய கோயில் இருக்கிறது.வழக்கறிஞர்களாகிய நமக்கு சட்டப்பணிகள் மட்டுமல்லாது சமுதாயப்பணியும் தேவை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.வழக்கறிஞர்களுக்கு சமுதாயப்பணி தேவை. ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றிய செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், பி.எச்.பாண்டியன் ஆகியோர் சபாநாயகர்களாகியுள்ளார்கள்.வழக்கு வந்துவிட்டால் அதை சீக்கிரமாக முடித்துக்கொடுக்கின்ற கடமை வழக்கறிஞர்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.




உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.இளங்கோவன் தெரிவித்ததாவது,இந்த நீதிமன்றமானது பல தடைகளைத் தாண்டி வந்திருக்கின்றது. இந்த மண்ணின் மைந்தர்களின் முனைப்பில்தான் நீதிமன்றம் அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றத்தில் உள்ள 1000 வழக்குகளை எவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டுமோ அந்த முன்னெடுப்புகளை வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டும். பழமை எப்படி புதுமையாகிறதோ அதுபோன்ற இந்த நீதிமன்றம் ஒரு நல்ல நீதிமன்றமாக உருவாக வேண்டும். அதற்கு பொதுமக்களும், வழக்கறிஞர்களும் புதிதாக வந்திருக்கின்ற நீதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்றத்தை ஒரு முன்மாதிரி நீதிமன்றமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.


இவ்விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ.செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தலைமை குற்றவியல் நடுவர் சு.செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.நம்பிராஜன், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ( 1 - 2) நீதிபதி பி.மகாராஜன், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.முத்துலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆறுமுகப்பெருமாள், சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டன