பொதுவாக மற்ற துறையை விட, அதிக நெருக்கடி, கட்டுப்பாடுகள் இருப்பது காவல் துறைதான். எந்தவித ஓய்வுமின்றி நீண்ட நேரம் அதிக அழுத்தங்களை தாங்கி பணியாற்றுவதால் காவலர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றவுடன் காவலர்களுக்கு விடிவு காலம் கிடைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்க வேண்டும், அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் அன்று லீவு கொடுக்க வேண்டும் என்ற சூப்பரான அறிவிப்புகள் வந்தன. ஆனால் இந்த அறிவுப்புகளை பெரும்பாலான காவல் நிலையங்களில் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

ஆடியோ வெளிட்ட சப் இன்ஸ்பெக்டர் : 

 

இதனை வெளிப்படையாக கொட்டி தீர்த்து விட்டார் நெல்லையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம். இது தொடர்பாக இவர் வெளியிட்ட ஆடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ''கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நான் விடுப்பு இல்லாமல் எனது திருமண நாள் பிறந்த நாள் வரை ஓய்வு எடுக்காமல் வேலை செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் நான் உறங்கியது இல்லை.





எனது அன்பு மகள் உறங்கியபின் வீட்டுக்கு வருவதும் காலையில் விழிக்கும் முன்பாக நான் வேலைக்கு செல்வது வாடிக்கையான ஒன்று எனது குழந்தைகள் என்னை ஒரு பத்து நிமிடமாவது என்னுடன் விளையாட வாருங்கள் என்று அழைக்கும் போது கூட என்னால் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு நான் காவல் பணியில் இருந்து வருகிறேன். மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் மேலும் அதிகமாகி எனது இதயம் துடிக்க மறந்து விட்டால் எனது குடும்ப உறவுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடும்' என்று மனவேதனையை கொட்டி தீர்த்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது


பணியிட மாற்றம் வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள் - டி.ஜி.பி கரிசனம் :

 

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் தென்காசி கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்களை தடுப்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.



தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்தும் ஆலோசனை மேற்கொண்டார் இதையடுத்து மாநகரின் முக்கிய காவல் நிலையமான பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வுக்கு சென்றார் பிறகு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் பணி நிலவரம் குறித்து டிஜிபி கேட்டறிந்தார் அப்போது, இன்று காலை மன அழுத்தம் காரணமாக தனது இதயத்துடிப்பு நின்று விடலாம் என்று மிகுந்த வருத்தத்துடன் இன்று காலை ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் கடைசி ஆளாக நின்று கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு டிஜிபி கிளம்பும்போது உதவி ஆய்வாளர் அருணாச்சலம் மட்டும் திடீரென சல்யூட் அடித்து டிஜிபி தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி செய்தார் பின்னர் அவரிடம் கைகாட்டி பேசவேண்டும் என்று கூறியதும் டிஜிபி சைலேந்திரபாபு அருணாச்சலத்தை தனியாக அழைத்துச்  சென்று பேசினார்.



 

அப்போது அருணாச்சலம், ஆடியோ வெளியட்டது தவறு தான் ஆனால் மிகுந்த மன அழுத்தத்தால் வேறு வழியின்றி ஆடியோ வெளியிட்டு விட்டேன் என்றும் நெல்லை மாநகர காவல் துறையில் காவலர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் டிஜிபியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது. இதை கேட்ட டிஜிபி, மனம் தளராமல் தொடர்ந்து பணியாற்றுங்கள் அதிகாரிகளின் டார்ச்சர் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன் உங்களுக்கு இடமாறுதல் வேண்டும் என்றால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்று அருணாச்சலத்துக்கு ஆறுதல் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு பாளையங்கோட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்தார் மன அழுத்தம் காரணமாக உதவி ஆய்வாளர் ஆடியோ வெளியிட்ட சம்பவத்தால் நெல்லை மாவட்ட காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை டிஜிபி தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.