ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் காளியம்மாள் (54) இவர் தனது 2-வது மகள் மணிமேகலையுடன் (34) ரெயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு காளியம்மாளும், அவரது மகள் மணிமேகலையும் வீட்டில் தீப்பிடித்து உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். இது குறித்து அவரது மூத்த மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.


இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதியான சசிகுமார் என்பவர் பணம், நகைக்காக இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு தாய்-மகள் இருவரது உடல்களையும் அவர்கள் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம். அவர்களை கைது செய்யும் வரை இருவரது உடல்களையும் வாங்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்-மகள் இருவரது உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் போது கருகி எலும்புக்கூடாக இருந்ததால் தடய அறிவியல் சோதனைக்காக சில பாகங்கள் மதுரை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.




இதற்கிடையே இந்த கொலை  வழக்கில் முக்கிய நபரான சசிகுமார் போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக சசிகுமாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியில் தங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சுப்பிரமணி (44) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.இது குறித்து மாவட்ட எஸ்பி கார்த்திக் கூறுகையில், உடல் பாகங்களில் எளிதில் தீப்பற்றும் வேதிப் பொருள்கள் உள்ளதா என்பதை அறிய தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், எரிந்தவர்களை அடையாளம் காணும் வகையில் மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வசிக்கும் மற்றொரு மகள் சண்முகப்பிரியா மூலம் இதனை செய்ய இருக்கிறோம். மருத்துவ பரிசோதனையில் அடித்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம், என கூறப்பட்டுள்ள நிலையில் தடயவியல் மற்றும் மரபணு பரிசோதனைகள் அவசியமானது, என தெரிவித்தார்.




பிறந்த நாடான இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக, அங்கிருந்து அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு  அகதிகளாக வந்து முகாம்களுக்குள் அடைபட்டு  போதிய வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழர்களுக்கு, நட்பு ரீதியாக பழகியவர்களுக்கு  பணி கொடுத்து பாசக்கரம் நீட்டிய  காளியம்மாளை  கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி இலங்கை தமிழர்கள்  கொலை செய்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பகொலையில்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.