தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. இந்த லாரியை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கடந்த நவம்பர் 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் வைத்து TN 69 BL 5555  என்ற காரில் வந்த நபர்கள் வழிமறித்து கடத்தி சென்றனர்.

 


 

இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஹரி (40)  என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக டிரைவர் ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனைத்துச் சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்தனர். மேலும், பின்னால் காரில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

 

விசாரணையில் தூத்துக்குடி அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சித செல்லப்பாண்டியன் மகன் ஜெயசிங் (45), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (30), முறப்பநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33), முள்ளக்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மனோகரன் (35), பிரையண்ட் நகர் 12வது தெருவைச் சேர்ந்த சக்தி மகன் விஷ்னு , முறப்பநாட்டைச் சேர்ந்த முனியசாமி மகன் பாண்டி , நெல்லை சமாதான புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார்  ஆகிய 7 பேரையும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், கடத்தப்பட்ட  ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்பு, 10 லட்சம் மதிப்புள்ள லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


                              

 

இந்தவழக்கில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய அனுமதிகோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில்   மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முந்திரி லாரி கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 183 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது