கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு  பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 


 

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி காணப்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் குரங்கு அம்மை பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து கேரளா - தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.