நெல்லை பாராளுமன்ற தொகுதியில்  இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றிக்கு தேர்தல் பணியாற்றும் வகையில்  நெல்லை மற்றும்  பாளையங்கோட்டை தொகுதியின் செயல்வீரர் கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது .


இந்த கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசுகையில், "இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாக மூலகாரணமானவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எனது சார்பில் சேலத்தில் மாபெரும் பேரணி நடத்தினேன். இதில் ராகுல்காந்தி , மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். அப்போதே மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம்" என்றேன்


இதுபோன்று இந்திய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்குங்கள் என ராகுல்காந்தியிடம் கூறினார். சென்னையில் நடைபெற்ற தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்  விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தி பேசும்போது மதசார்பற்ற கூட்டணி அமைய, மதவாதத்தை வீழ்த்த, பாஜகவை வீட்டுக்கு அனுப்ப இந்தியாவில் ஜனநாயகத்தை காக்க ஒரு கூட்டணியை உருவாக்கி தாருங்கள் என மல்லிகார்ஜுன கார்க்கேவிடம் பிறந்தநாள் செய்தியாக சொன்னார். அதனைத் தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு வெற்றி நடைபோடுகிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 2½ ஆண்டு காலத்தில் 90 சதவீதத்திற்கு மேலாக வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். 2004 முதல் 2014 வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் கேட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை. பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் வேதனையில் உள்ளனர். ஊழலில் ஊறி திளைத்த ஆட்சி மத்தியில் நடக்கிறது. மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது. 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும், கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். பாஜகவை வீட்டிற்கு அனுப்புங்கள் என கூறினார்.




    
முன்னதாக நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் பேசுகையில் எதிர்த்து போட்டியிடும் நயினார் நாகேந்திரன், அந்த கட்சியில் அவர் மட்டும்தான் இருப்பது போல், வெற்றி பெற்றாலும் அவர்தான் வேட்பாளர், தோற்றாலும் அவர்தான் வேட்பாளர்  அவர் எல்லோருக்கும் வணக்கம் போடுபவராக இருக்கலாம். நமக்குள் உறவு இருக்கலாம். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால்  நீ வேறு !  நாங்கள் வேறு ! நமக்குள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என இங்கு இருப்பவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.


உறவை சொல்லி வரும்போது நீங்கள் ஏமாந்துவிடக்கூடாது , நமது வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் வேண்டுமா, பாசிசம் வேண்டுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது, ஜனநாயகம் காக்க இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும் பாஜக மதத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து செயல்படும் இயக்கம், மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் தரவில்லை. ஜனநாயகம் காக்க மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க மோடி அரசு அகற்றபட வேண்டும் என கூறினார்.