நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் 33 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகளை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோர் பார்வையிட்டனர். திட்டத்திற்கான வரைபடம் மற்றும் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் கட்டிடத்தின் முடிவு பெற்ற பணிகள் தொடர்பான காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் பொருத்தப்பட இருக்கும் தரைத்தள ஓடுகளையும், மேற்கூரை ஓடுகளையும் பார்வையிட்டு அதன் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு கூறும் பொழுது, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 33 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு 54 ஆயிரம் சதுர அடியில் பணிகள் நடந்து வருகிறது. பொருநை நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற பொருட்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் முதியோர் வந்து எளிதில் அருங்காட்சியகத்தை காணும் வகையில் பேட்டரி கார்களை பயன்படுத்த அதற்கான பாதைகள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. இந்த நிதியாண்டில் அருங்காட்சியக பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்டிடம் கட்டுவதற்கு குறிப்பிடப்பட்ட ஒப்பந்த காலத்திற்கு முன்பு பணிகள் நிறைவு பெறும் வகையில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. நிர்வாக கட்டிடம் சிவகளை கட்டிடம், ஆதிச்சநல்லூர் கட்டிடம், கொற்கை கட்டிடம் என 7 பகுதிகளாக அருங்காட்சியக கட்டிடங்கள் கட்டபட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அருங்காட்சியகத்திற்கான கட்டிட பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் அருங்காட்சியகம் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் கட்டப்படுகிறது. சோழர் கால கட்டிடம், பாண்டியர் கால கட்டிடங்கள் என பேசுவதை போல் திரவிட மாடல் ஆட்சியில் கட்டபட்டு வரும் கட்டிடங்களில் பிற்காலத்தில் மு.க ஸ்டாலின் கால கலை கட்டிடங்கள் என பேசப்படும். நெடுஞ்சாலை துறை, பொதுப்பணி துறை சார்பில் நடக்கும் பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலத்திற்கு முன்னால் முடிக்கவேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நில எடுப்பு பணிகள் முறையாக நடத்தப்படாததால் தான் தமிழகத்தில் தற்போது பல சாலை பணிகள் தொய்வடைந்துள்ளது. நெல்லை புறவழிச்சாலை நில எடுப்பு பணிகள் 90% நிறைவு பெற்று ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் சுங்க சாவடி விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அழைத்து பேசி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலம் கடந்த 30 க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் செயல்பட்டு வருவகிறது. பரனூர், கிருஷ்ணகிரி ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை போன்ற சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.