பல்வேறு திட்டப்பணிகளுக்கான விழா:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1200 பயனாளிகளுக்கு 33.58 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நடந்து முடிந்த திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
குறிக்கோளோடு செயல்படும் முதல்வர்:
கடந்த மூன்று ஆண்டுகாலமாக திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் தத்துவத்தை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள மக்கள் ஒருவருக்கும் ஏதேனும் ஓரு நலத்திட்டம் வழங்கவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார். பட்டா மாற்ற பல நாள் அலைய வேண்டிய நிலை மாறி மக்களை தேடி வரும் நிலையாக மாறியுள்ளது. 5 கோடி 35 லட்சத்தில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 1200 பேருக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை சார்பில் வழங்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி துறை,வேளான் துறை என பல துறை சார்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுடன் பல கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1200 பயனாளிகள் 33 கோடியே 58 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் என பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
குடிசை இல்லா தமிழகம்:
தொடர்ந்து பேசிய அவர், இந்த முறை நிதி நிலை அறிக்கையில் மிக முக்கியமான திட்டமாக குடிசை இல்லா தமிழ்நாட்டை நாம் உருவாக்குவோம். எந்த மூலைக்கு சென்றாலும் குடிசை வீடுகள் இருக்கக்கூடாது. எல்லோருக்குமான ஒரு தரமான கான்கிரீட் வீடுகள் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்துனை வீடுகளிலும் கணக்கெடுக்கும் பணியை துவங்கி அதற்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஆதிதிராவிடர் மக்கள் வீடுகள் கட்டவும், புதுப்பிக்கவும் 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்த தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சமுதாயத்தில் எந்த நபராக இருந்தாலும் வேறுபாடுகளைத் தாண்டி ஆட்சியின் நல்ல திட்டங்கள் சென்று சேரும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பிரிவினையும் பாராது தாயுள்ளத்தோடு தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் நிவாரணம் வழங்கியுள்ளார்.
மக்களின் துயரத்தில் பங்கு பெறும் முதல்வராக உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து வருகிறார். இதனை மறவாது தமிழக முதல்வருக்கு நெல்லை மாவட்ட மக்கள் என்றைக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.