“எங்களுக்கு கவர்னரை கண்டு பயம் ஒன்றும் இல்லை. ஆனால் ஜனநாயக அமைப்பை சிதைத்து விட கூடாது என்பது தான் திமுகவின் கரிசனம் என்று தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

 

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடி வெற்றி பெற்ற மார்ஷல் நேசமணி அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆளுநர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால் சிலர் அந்த மாண்பை மீறி வருகிறார்கள். தமிழக அரசுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நெருக்கடி என நினைப்பது காணல் நீரை கண்டு மகிழ்வதை போன்றது. பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் , பாஜகவின் தமிழ் மொழிக்கான போராட்டம் என்பது ஒரு மாயை இது ஒரு கபட நாடகம்” என்றார்.

 

மேலும், கடந்த காலத்தில் கடவுள் திர்ணாமூல் அரசு இருப்பதை விரும்பவில்லை அதனால் தான் மேற்கு வங்கத்தில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது என பிரதமர் மோடி கூறினார். இப்போது குஜராத் பாலம் விபத்து ஏற்பட்டுள்ளது. தேர்தல் வரப்போகிறது இது கடவுளின் செயல் என ஏற்றுக்கொள்வாரா என கேள்வி எழுப்பினர்.

 

திராவிட இயக்கங்கள் காரணமாக தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி அடைந்து உள்ளது. எங்களுக்கு என்னவோ கவர்னரை கண்டு பயம் ஒன்றும் இல்லை ஆனால் ஜனநாயக அமைப்பை சிதைத்து விட கூடாது என்பது தான் திமுகவின் கரிசனம் என கூறினார்.