கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி குளச்சலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் 256 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர்  நாகூர்கான், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 45 ஆண்டு காலமாக மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்குவது, அதேபோல் சுனாமி குடியிருப்புகளில் பட்டா வழங்குவது போன்ற பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. அதனை  தீர்க்கும் வகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இன்று குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட பகுதிகளில் 227 மீனவ சகோதரர்களுக்கு இலவச பட்டா  வழங்கி உள்ளோம். வரும் நாட்களில் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீண்ட கால பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு ஏற்பட்டுள்ளது" என்றார்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் விவகாரம் குறித்து கேட்ட போது, “நாடு ஜனநாயகத்தில் இருந்து மாறி கொடுங்கோன்மைக்கு நேராக செல்கிறதா? என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாராளுமன்ற நடைமுறைகள் உள்ளது. பாராளுமன்ற தாக்குதலால் சீர்குலைக்கப்பட்ட இன்று ஒரு   கொடுங்கோன்மை ஆட்சி எப்படி இப்படி நடைபெறும். அதேபோல இந்த சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசாமல் நடுத்தெருவிலா பேசுவார்கள்?. அவர்களை பேச  கூட அனுமதிக்க மாட்டோம். அப்படி  பேசுகின்றவர்களின் வாயை அடைக்கும்  அரசு, ஜனநாயக கடமையில் இருந்து முற்றிலும் மீறி  கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொள்வது எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் கொடுங்கோன்மை அரசு பாசிஷ்ட அரசு அதே போல் தனிநபரை சார்ந்த அரசு அகற்றப்பட வேண்டும் என்று பல ஆண்டு காலம் போராடி ஜனநாயகத்தை பெற்று வருகின்றனர். ஏனென்றால் ஜனநாயகம் மக்களுக்கு நியாயத்தை ஏற்படுத்தி தரும் ஜனநாயகம் தான் மக்களுக்கு பாதுகாப்பை தரும். ஜனநாயகம் தான் மக்களுக்கு அமைதியை கொடுக்கும். எனவே தான் நாங்கள் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம். ஜனநாயகத்தை ஒரு கொடுங்கோன்மைக்கு நேராக எடுத்துச் செல்கின்ற பாஜகவின் முயற்சியை பொதுமக்கள் ஒன்றிணைந்து  முறியடிக்க  வேண்டும்” என்றார்.