குக்கிராமங்களும் பயன்படும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 




தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூரில் கால்நடை பராமரிப்புத்துறை தேசிய கால்நடை இயக்கத்தின் சார்பில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து கண்காட்சிகளை பார்வையிட்டார். அதன்பின்னர் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் முகாம் குறித்து பேசினர்.




அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி முகாமை துவக்கி வைத்து  பேசுகையில், “தமிழகத்தில் 5 வகை பசு இனங்களும், 2 வகை எருமை இனங்களும், 10 செம்மறி ஆட்டு இனங்களும், 3 வெள்ளாட்டு இனங்களும் உள்ளது. உள்நாட்டில் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிக்குளம் பசுவினங்களுக்கு ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.




தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பையும் செய்து வருவதால் விவசாயிகள் வாழ்வு மேம்பட்டு வருகிறது. தோட்டங்களில் ஊடு பயிராக பசுதீவனம் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது. கால்நடைகளின் விந்து உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக, விந்து கொண்டு செல்ல குளிர் சாதன வசதியுடன் வாகனங்களை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. பசுக்கள், காளைகள் என தனித்தனியான விந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 




மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”குக்கிராமங்களில் இதுபோல் கால்நடை விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்கு வைத்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருடத்திற்கு ஒரு கன்று பெற அனைத்து நடவடிக்கைகளும் கால்நடை பராமரிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாடு முழுவதும் 245 நடமாடும் கால்நடை பராமரிப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடை மருத்துவமனைகள் இல்லாத குக்கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கென தனி செல்போன் நம்பர் அறிவித்து அதில் அழைத்தால் கால்செண்டர் மூலம் இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட குக்கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக  தெரிவித்தார்.