குண்டுமிளகாய் பழம் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள், கிராமங்கள் தோறும் விளைபொருள் இருப்பு வைக்க குடோன் கட்ட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம், கயத்தார், புதூர், விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே புரட்டாசி ராபி பருவத்தில் சிறுதானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், வத்தல், வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை சீற்றம் அல்லது வறட்சி என ஏதாவது ஒரு கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவித்து வந்தனர். அதேபோல் இந்தாண்டும் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மனம் தளராத விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்தனர்.
விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, பகுதி நிலங்கள் கரிசல் மண் சார்ந்தவை என்பதால் இங்கு விளையும் முண்டு வத்தல் காரத்தன்மையும், அதிக விதையும், சுவையும் கொண்டதாகும் சந்தையில் விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு நல்ல மவுசுண்டு. ஏக்கர் ஒன்றுக்கு களை எடுக்க சராசரியாக ரூபாய் முப்பதாயிரம் வரை செலவு ஏற்பட்டது. இதனால் செலவழித்து விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்தனர். இந்தாண்டு மழை குறைவு என்பதால் மிளகாய் செடியில் ஒரு சில பழங்கள் மட்டுமே உள்ளது. இலைகள் அனைத்தும் நிலத்தில் ஈரமின்றி உதிர்ந்துவிட்டன. தற்போது இதர மகசூல் அறுவடை முடிந்த நிலையில் மிளகாய் பழம் பறிப்பு பணி நடைபெறுகிறது.
இன்னும் கூலி ஆட்கள் சம்பளம் குறைந்தபாடில்லை. காலை 8.30 முதல் மதியம் மூன்று மணி வரை ரூபாய் முன்னூற்று ஐம்பது சம்பளம், பத்துமணிக்கு பழரசம், மதிய உணவின்போது இரண்டு வடைகள், மதியத்திற்கு பின் இரண்டரை மணிக்கு காரச்சேவு, காபி, பத்து வேலையாட்களுக்கு ஒரு கொத்தனார் கூலி, வண்டி வாடகை என ஒரு வேலையாளுக்கு. சராசரியாக ரூ 500/= சம்பளமாகிறது. கடந்த காலங்களில் மூன்று முறை பறிக்கப்படும் பழம் இந்தாண்டு போதிய ஈரப்பதம் இல்லாததால் ஒரே பறியுடன் முடிந்துவிட்டது என்கின்றனர் விவசாயிகள்
இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும் போது, தற்போது சம்பா வத்தல் குவிண்டால் ரூ19 ஆயிரத்திற்கும், முண்டு வத்தல் எனப்படும் குண்டு வத்தல் குவிண்டால் ரூ 16 ஆயிரத்திற்கும் விலை போகிறது. தற்போது குண்டு வத்தல் வரத்து அதிகமாக உள்ளதால் இருப்பு வைக்க குடோன் வசதி இல்லாததால் அவ்வப்போது விலைக்கு விற்று விடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு ஒரளவு விளைச்சலை முண்டு வத்தல் பெற்றுள்ளது. அதன் செலவும் பன்மடங்காகிறது
தவிர சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், ஆர்எஸ் மங்கலம் போன்ற பகுதிகளில் சாகுபடி செயயப்படும் குண்டு மிளகாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உறுதுணையாக இருந்தார். அதே போல் விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் விளைவிக்கபடும் முண்டு வத்தலுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவும், கிராமங்கள் தோறும் விளைபொருட்கள் இருப்பு வைக்க குடோன் கட்டித்தரவும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.