2011-ல் நடந்த ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார் 2011 மார்ச் 1ஆம் தேதி காலை 11:15 மணியளவில் ஆறுமுகநேரியில் இவரை சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருச்செந்தூர் எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் தன்னை கொலை செய்ய முயன்றதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி என்ற சசிகுமார், மணிகண்டன்,ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டனர். பாலகிருஷ்ணன், கோபி,உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.




இதேபோல் கடந்த 21.5.11 அன்று இரவு 10.15 மணியளவில் சுரேஷின் கட்சி அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்து சேதப்படுத்தியதாகவும் அதே நாள் இரவு 11:30 மணியளவில் சுரேஷுக்கு சொந்தமான மதுபான கூடத்தில் வெடிகுண்டு வீசியதாகவும் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபி,உதயகுமார், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த இரண்டு வழக்குகளும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த மூன்று வழக்குகளிலுமே அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.




இந்த வழக்குகளில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று வழக்குகளிலும் அனிதா  ராதாகிருஷ்ணன்  உள்ளிட்ட அனைவரும் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார்.




அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.இதே போல் இரண்டு வழக்குகளின் முதல் எதிரியாக சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர். தற்போது அதிமுகவிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.