மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்
மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர், கண்டக்டர்
லாசி, கன்னியாகுமரி Updated at:
16 Aug 2022 12:29 PM (IST)
கன்னியாகுமரி கோதையாறு - நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு -நாகர்கோவில் அரசு பேருந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சிறுகாயத்தோடு தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், பவர்கவுஸ் மின்வாரிய ஊழியர்கள், ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக என பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கோதையாயாறுக்கு தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பாதையில் இந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் பல பகுதிகளில் உள்ள தரை பாலம் வழியாக பல நீரோடைகள் மற்றும் ஆறு பகுதிகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. சாதாரண மழை பெய்தால் கூட நீரோடைகள் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடும். அப்போது இந்த சாலையில் பேருந்து இயக்குவது என்பது கடினமாக இருக்கும் நிலையில் நேற்று அரசு பேருந்து கோதயாரு சென்றுவிட்டு பவர்கவுஸ் அருகே இறக்கத்தில் வந்து கொண்டு இருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பகுதியில் மரம் நின்ற காரணத்தாலும் ஓட்டுனரின் துரித நடவடிக்கையாலும் மலையில் இருந்து சுமார் ஐம்பதடி பள்ளத்தில் கவழாமல் தப்பித்தது. பேருந்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டுமே இருந்ததால் பெரும் விபத்து நடக்காமல் தப்பித்துள்ளது. நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு சிறு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
பேச்சுபாறை வழியாக மோதிர மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்றும் இந்த சாலையில் கோதை ஆறு கடக்கும் பகுதியில் அமைந்துள்ள தரைப் பாலத்தை உயர் மட்டபாலமாக மாற்றி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ள நிலையில் அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் மற்றும் மின்சார துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல் பகுதியில் பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடல் சீற்றத்துடனே காணப்படும். இந்த வருடம் ஜூன் மாதம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் அழிக்கால், கொட்டில்பாடு, கொல்லங்கோடு போன்ற மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் கடல் நீர் சூழ்ந்து சேதமடைந்ததால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
தொடர் கடல் சீற்றத்தால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கடல் சீற்றம் ஓய்ந்த நிலையில் மீன்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் மீண்டும் திடீரென கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.
கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவுகள் சேதமடைந்து சாலைகளும் உடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது சில வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கடல் சீற்றத்துடனே காணப்படுவதால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து வருவதோடு குடியிருப்பு பகுதிகளில் மேலும் கடல்நீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.