இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் என மொத்தம் 14 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக உதவி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகாமில் கலந்து கொண்ட பெண்கள், சங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்கவில்லை எனவும், தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகளில் இருந்து எஸ்எம்எஸ் தகவல் வரவில்லை எனவும், வேறு வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். அனைத்து புகார்களும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என பெண்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படாதவர்கள் செப்டம்பர் 19 முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என முதல்வர் அறிவித்திருந்தார். பெண்கள் மேல் முறையீடு செய்வதற்காகவும், அவர்களது விண்ணப்பம் தொடர்பான நிலையை தெரிந்து கொள்ளவும் தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலர் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளனர். மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு இருந்தால் தான் பணம் வரவு வைக்கப்படும். சிலர் அஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறார்கள், அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆனால் கணக்கை சரிபார்த்தால் பணம் வந்துள்ளது. இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் இங்கே வந்துள்ளனர்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். சிலரது வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாத காரணத்தால் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும். அதற்காகவும் பெண்கள் இங்கே வந்துள்ளனர். சிலர் தங்களது தந்தையின் வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். அந்த கணக்குக்கு பணம் வந்துள்ளது. இதுபோல சிறு சிறு பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகளுக்கு தீர்வு காணுவதற்காக தான் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 14 உதவி மையங்களிலும் மேல் முறையீடும் செய்யலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் மேல் முறையீடு செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என தனியார் இ-சேவை மையங்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தவறுகளை சரி செய்ய 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. எனவே, அனைத்து தவறுகளும் சரி செய்யப்படும்" என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் தேவசகாயம் உள்ளி்டடோர் உடனிருந்தனர்.