தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி, பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.




அப்போது பேசிய சண்முகநாதன், "வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியை நல்ல முறையில் அமைத்தால் தூத்துக்குடி தொகுதி எப்போதும் நம்வசம் தான் இருக்கும். பூத் கமிட்டியில் அந்தந்த வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ளவரை நியமிக்க வேண்டும். ஒரே குடும்பத்தினரை நியமிக்க கூடாது. பூத் கமிட்டியில் 19 பேரும், மகளிர் குழுவில் 25 பேரையும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழுவில் 25 பேரையும் சேர்க்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டப் போராட்டம் நடத்த வக்கீல்கள் உள்ளனர். நம் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளது. நாம் எதிர் கட்சியாக இருந்தாலும் யாருக்கும் பயந்து செயல்படவில்லை.




ஒரு ஓட்டு கூட சிதற விடக்கூடாது. அனைவரையும் அரவணைத்து ஓட்டு போட வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும். கட்சியில் இருந்து சில துரோகிகள் விலகி விட்டார்கள். தற்போது கட்சியை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நாம் நம்மை பற்றித்தான் நினைக்க வேண்டும். கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம். அதனை பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார்.




கூடுதல் சீட்டுக்காக மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர். யாரும் மாவட்ட கழக அனுமதி இல்லாமல் நோட்டீசு ஒட்ட வேண்டாம். நமக்கு உத்தரவு வந்தால் அனைவரையும் ஓட, ஓட விரட்ட முடியும். பா.ஜனதா வேறு வழியில்லாமல் கடைசியில் நம்மிடம் தான் வருவார்கள். ஆகையால் பா.ஜனதா பற்றி பேச வேண்டாம்" என்று கூறினார்.


கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் யு.எஸ்.சேகர், நடராஜன், விக்னேஷ், ஜெ.தனராஜ், கே.ஜெ.பிரபாகர், அருண்ஜெபக்குமார், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், எம்.பெருமாள், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, வக்கீல்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் ஆதித்தன், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.