கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவர் இயந்திரம் மூலம் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார். மேலும், தீப்பெட்டியில் தீக்குச்சிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பணி குறித்து கேட்டறிந்தார்.




தொடர்ந்து பணியில் இருந்த பெண் தொழிலாளர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தீப்பெட்டி ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோர், எங்களுக்கு வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. சீன லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பணி வழங்க வேண்டும், என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி குறைந்துள்ளது. அதனை தடை செய்ய வேண்டும், என்றனர். மேலும், அவர்கள் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.




தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். அம்மனுவில், தீப்பெட்டி தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலான லைட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த லைட்டர்கள் ஒருமுறை உபயோகப்படுத்தும் மக்கும் தன்மை இல்லாததாக உள்ளன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில், சீன லைட்டர்களுக்கு இந்திய அரசு மூலமாக நிரந்தர தடையை பெற்று தர வேண்டும்.




தீப்பெட்டி உற்பத்திக்கு படைகலச் சட்ட உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, வாழ்நாள் உரிமமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீப்பெட்டி தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருட்களான பொட்டாசியம் குளோரேட் பாண்டிச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள சில நிறுவனங்களில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். அங்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுத்தி விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இங்குள்ள உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளின் உதவியோடு கிளஸ்டர் முறையில் பொட்டாசியம் குளோரேட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கு மானிய விலையில் மின்சார வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தி இருந்தனர்.


இதனை தொடர்ந்து கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் 10.கோடி 50.லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட  மகப்பேறு  மற்றும் குழந்தை நல பிரிவு கட்டிடத்தை  தமிழக முதல்வர்.மு.க ஸ்டாலின் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து.மேலும் கட்டிடத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள்,  பொது மக்களிடம்  கோரிக்கை மனுக்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில்அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன்,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.