நெல்லையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது, குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட  கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், நெல்லை மாநகராட்சியில் 27 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாலாஜி கிருஷ்ணசாமியை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை டவுண் வீதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்குகளை  சேகரித்தார். மேளதாளம் முழங்க ஆதரவாளர்களுடன் சென்று தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.



தொடர்ந்து  பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, தமிழகத்தில் நீட் தேர்வை பொருத்தவரை,  சமூக நீதிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கோட்டா அடிப்படையில் பெறும் எண்ணிக்கையை விட அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகப்படியான எண்ணிக்கையில் தற்போதைய நீட் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர். கல்லணை அரசு பள்ளியில் 7 மாணவிகள், நடுக்ககல்லூரில் மூன்று மாணவிகள், மானூரில் இரண்டு பேர் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. கூலித்தொழிலாளியின் குழந்தைகள் மருத்துவ படிப்பு படிப்பதற்கும் இந்த நீட் தேர்வு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.


தமிழகத்தை தாண்டி அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு கேட்பது சரியானதல்ல என தெரிவித்தார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என தெரிவித்தார். தூய்மையான நேர்மையான ஆட்சியை தரக்கூடிய பிரதமர் மோடியின் பாஜக கட்சிக்கு வாக்காள பெருமக்கள் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.




நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை எங்களால் மட்டுமே தர வேண்டும்,  சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்திற்கு எனக்கு வாக்குகளை தந்தது போல தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,  ஆளுங்கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்பது வழக்கமாக இருந்தாலும் திமுக, அதிமுகவின் மீது மக்கள் அதிப்ருதில் இருப்பதால் பாஜகவுக்கு மக்களிடம் அதிக ஆதரவு உள்ளது, திருநெல்வேலி மாநகராட்சியில் அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். அதே போல எந்த மிரட்டலுக்கும் பாஜக அடி பணியாது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படாமல் தேர்தல் ஆணையம் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஊழல் அற்ற நேர்மையான அரசியலை பாஜக மக்களுக்காக செய்யும், எனவே மக்கள் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்