Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறு
அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அமித்ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த போது சொராபுதீன் சேக் என்பவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமித்ஷாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு மாத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அமித்ஷா இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இச்சூழலில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் தற்போது கட்சி தலைவராக இருக்கிறார் என்று கூறினார். அப்போது பாஜகவின் தேசியத் தலைவராக அமித்ஷா இருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சால் கடும் கோபமடைந்த பாஜகவினர் நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சாய்பாசாவில் உள்ள உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், அவதூறு வழக்கு பிப்ரவரி 2020 இல் ராஞ்சியில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அளித்தது. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேரில் ஆஜரானர். அப்போது அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. ஜூலை 26, 2024 அன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரான ராகுல் காந்தி இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்று சொன்னார்.
இச்சூழலில் தான் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் ராகுல்காந்திக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது