Moolakaraipatti SIPCOT: மூலக்கரைப்பட்டி பகுதியில் ஆயிரத்து 60 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் புதிய சிப்காட்:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் மாவட்டங்கள் தன்னிறைவு பெற புதுப்புது திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் முதலீடு செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, தேவையின் அடிப்படையில் சென்னையை தாண்டி பிற மாவட்டங்களிலும் முதலீடு செய்ய பரிந்துரைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், திருநெல்வேலி மாவட்டத்தை தொழில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றும் நோக்கில், புதியதாக இரண்டு சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதில், ஒன்றான மூலக்கரைப்பட்டி தொழிற்பூங்காவை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூலக்கரைப்பட்டி தொழிற்பூங்கா எங்கு அமைகிறது?
கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், “நாங்குநேரி மற்றும் மூலக்கரைப்பட்டி பகுதிகளில்” புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையின் போது அறிவிக்கப்பட்ட மூலக்கரைப்பட்டி சிப்காட் திட்டத்திற்காக நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மூலக்கரைப்பட்டி மற்றும் முனாஞ்சிப்பட்டிக்கு அருகிலுள்ள தாமிரபரணி மற்றும் கருமேனியார் நதி வாய்க்காலுக்கு இடையில் இருக்கும். அண்மையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்து 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து வசதிகள்:
திருநெல்வேலி மெயின் ரோட்டை ஒட்டி இந்த நிலம் அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்து எளிதாகி, திருநெல்வேலியிலிருந்து 35 நிமிட பயணத்தில் சிப்காட்டை எளிதில் அடைய முடியும். தூத்துக்குடி துறைமுகமும் அருகில் இருப்பதால் ஏற்றுமதியும் எளிதாகும் வகையில் இந்த பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கும் மூலக்கரைப்பட்டிக்கும் இடையேயான தூரம் வெறும் 20 கிமீ மட்டுமே என்பதும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் மூலக்கரைப்பட்டி வரையிலான தூரம் வெறும் 14 கிலோ மீட்டர் மட்டுமே ஆகும். இதனால் உற்பத்தி பொருட்களை எளிதாக வெளியூர்களுக்கும் கொண்டு செல்ல முடியும்.
திருநெல்வேலிக்கு மூன்றாவது சிப்காட்:
தொழில் பரவலாக்கல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளில் கணிசமான முதலீடு கிடைத்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க, ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ஏற்கனவே நெல்லை கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில், டாடா பவர் சோலார், விக்ரம் சோலார் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக கங்கைகொண்டான் சிப்காட் திறன் மிகை அடைந்துள்ளதால், பெரிய நிறுவனங்கள் வருவது பிரச்சனையாக உள்ளது. அதனால் தான் இரண்டு புதிய சிப்காட்கள் நெல்லையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
3,350 ஏக்கரில் தொழிற்பூங்காக்கள்:
அரசு அறிவிப்பின்படி, நாங்குநேரி பகுதியில் மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில் சுமார் 2291 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டு புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதோடு, மூலக்கரைப்பட்டி பகுதியில் 1060 ஏக்கர் தரிசு நிலத்தில் மற்றொரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட உள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிற் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் தொழில் முனைவோர்களுக்கு முதலீடு செய்ய ஏதுவான சூழலும் உருவாக்கப்படும். ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டிலும் திருநெல்வேலி முக்கிய பங்கு வகிக்கும்.
புதிய துறைகளுக்கு முக்கியத்துவம்:
ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், முதலீட்டாளர்களுக்கு சலுகைகளையும் வழங்கி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவி, வரி சலுகைகள் மற்றும் ஊதிய சலுகை உள்ளிட்ட பல்வேறு வகையான ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு, புதிய துறைசார் ஸ்டார்ட்-அப் பணிகளை தமிழ்நாட்டில் தொடரவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான உதாரணமாக தான் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, மின்சார வாகன உற்பத்தி, தினசரி பயன்பாட்டு பொருட்களுக்கான உற்பத்தி, விமானங்களுக்கான உதிரிபாக உற்பத்தி, காலணி உற்பத்தி என பல்வேறு துறைகளும் தமிழ்நாட்டில் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.