உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு  முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  மஹிஷா சூரசம்ஹாரம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து  இரண்டாவது ஆண்டாக கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது.


                                  


 

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு 10  நாட்கள்  நடைபெறும் தசரா  திருவிழாவில்  நாள்தோறும்  இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் இறுதிநிகழ்ச்சியாக நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் 10ஆம் நாள் திருவிழா அன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தசரா திருவிழாவில்  மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி காளி வேடம், அம்மன் வேடம், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாக சென்று காணிக்கை பெற்று மஹிஷா சூரசம்ஹாரம் நடைபெறும் 10ஆம் திருவிழா அன்று கோவில் உண்டியலில் செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம். 

 

இந்தநிலையில் இந்தாண்டுக்கான தசரா திருவிழா கடந்த 06 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தசரா திருவிழா கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. திருவிழா கொடியேற்றம்,  மஹிஷா சூரசம்ஹாரம், உள்ளிட்ட  நிகழ்ச்சிகளுக்கு  பக்தர்கள் கலந்து அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள்  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும்  பக்தர்கள் வேடமணிந்து கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்படவில்லை.  வேடமணியும் பக்தர்கள் உள்ளூரிலேயே  காணிக்கை பெற்று வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள  அறிவுறுத்தப்பட்டார்கள். 


                                  

 

இந்தநிலையில் திருவிழாவில்  தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி கோவில் உள் பிரகார மண்டபத்தில் நடைபெற்றது. சூரசம்ஹாரம்   நடைபெறுவதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்த்தினி கோலத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகம் வந்தார்.


                                  

 

முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். தொடர்ந்து  சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதம்  செய்தார். அதனை தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசா சூரனையும் வதம் செய்தார். கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக குலசேகர பட்டினம் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சூரசம்ஹாரம் நடைபெறுவதை குலசேகரப்பட்டினம் கோவில், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில்  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 100 தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


                                  

 

இன்று  அதிகாலை 3 மணிக்கு மேல் உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள், மாலை 5 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் ஆகியவை நடைபெற்றன. வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.