தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1922ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தவர் கி.ராஜநாராயணன்.ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னரே எழுத்தாளர் ஆனார். மாயமான் என்ற முதல் சிறுகதை 1958இல் சரஸ்வதி இதழில் வெளியானது.
கரிசல் பூமி மக்களின் வாழ்வியல், இன்பம், துன்பம், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தது. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார். வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.
பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன.2007இல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்ற படைப்பாக வெளியானது. 2009இல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளிவந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். கோமதி, கண்ணீர், கரிசல் கதைகள், கி.ரா.பக்கங்கள்,கிராமியக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்,கோபல்ல கிராமம், புதுமைப் பித்தன், மாமலை ஜீவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கிடை என்ற இவரது குறுநாவல் ஒருத்தி என்ற திரைப்படமானது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக இவருக்கு 1991இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
புதுவை இளவேனில் என்ற சங்கர், தனது மகன்களான திவாகரன் மற்றும் பிரபாகர் ஆகிய மூவருக்கு மட்டுமே தனது படைப்புகளும் எழுத்தும் உரிமையானது என 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதி வைத்தார் கரிசல்காட்டு கதை நாயகன் கி.ராஜநாராயணன்.தனது மிச்ச கதைகள் எனும் சிறுகதை தொகுப்பை கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த கி.ரா வயது மூப்பின் காரணமாக கரிசல் மண்ணோடு கலந்தார்.
கி.ரா நினைவாக கோவில்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து,கரிசல் இலக்கியத்தின் தந்தையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கி.ரா நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.நினைவரங்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் நூலகத்தில் கி.ராவின் படைப்புகள் உள்ளது. தொடுதிரையில் விரும்பிய புத்தகத்தை தொட்டதும் கி.ராவின் படைப்புகளை வாசிக்கலாம்
கி.ராவின் நினைவாக கரிசல் ஆய்வு மையத்தையும் அரசு தொடங்க வேண்டும், அதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழ் சமுதாயத்துக்கு செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும், கரிசல் மண்ணில் கரிசல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் அதன் வழியாக புதிய ஆய்வாளர்களை உருவாக்க முடியும். மேலும் புதிய எழுத்தாளர்களுக்கான சிந்தனை கூடமாக ஆய்வு மையம் அமைய வேண்டும் என கூறும் எழுத்தாளர்கள், கரிசல் வட்டார மையம் மிகவும் அவசியமான ஒன்று என்கின்றனர் எழுத்தாளர்கள்.