சுவாமி விவேகானந்தர் பலரின் வாழ்வில் உத்வேகமாகவும், குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். இவர் நம் நாட்டில் வாழ்ந்ததற்கான அடையாளமாகவும், நம் சந்ததிகளின் நினைவுகளில் இன்றளவும் நீங்காமல் நிலைத்திருக்கும் வகையில் தென்கோடியான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள அவரது நினைவு மண்டபம் ஓங்கி உயர்ந்த பெரும் சின்னமாய் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஓர் இடத்தில் பாதம் போன்ற அடையாளம் இருப்பதால் அது ”தேவியின் திருப்பாதம்” என்றும், அதனால் அது ”ஸ்ரீபாத பாறை” என்றும் அழைக்கப்பட்டது. கன்னியாகுமரி தேவி சிவபெருமானை திருமணம் செய்ய இங்கு தவம் செய்ததாகவும் நம்பப்படுகிறது. முன்னொரு காலத்தில் இப்பாறை கரையோடு இணைந்திருந்ததாகவும், அதன் பின் ஒரு நாளில் அப்பாறையை கடல் நீர் சூழ்ந்து கொள்ளவே நடுவே உள்ள பகுதிகள் கடலுக்குள் மூழ்கி உள்ளது. அதன் பின்னரே குமரி அன்னைக்கு கரையில் கோவில் எழுப்பப்பட்டு இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் பாறை வரலாறு:
1892 இல் இமயத்திலிருந்து தொடங்கிய இந்திய சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக கன்னியாகுமரி வந்த அவர் கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாறையை கண்டு அங்கு நீந்திச் சென்று 3 நாட்கள் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் இந்தியர்களின் ஏழ்மையையும், ஆன்மீக வீழ்ச்சியையும் கண்டு விடுதலைக்கான வழிகள் குறித்தும் ஆழ்ந்து யோசித்துள்ளார். பின் இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் விளைவாக அமெரிக்கா சென்ற அவர் உலக சமய மாநாட்டில் இந்தியர்களின் பெருமையை சொற்பொழிவாற்றி விண்ணுயற செய்தார். சுவாமி விவேகானந்தர் ஞான ஒளி பெற்ற இடமாதலால் இப்பகுதி நாளடைவில் விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டது.
நினைவு மண்டபம் எழுப்புதல்:
அதன் பின்னரே விவேகானந்தருக்கு அப்பாறையில் நினைவு மண்டபம் எழுப்புவதென அவரது நூறாவது ஆண்டான 1963 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன் பின் 1962 ஆம் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1970 ல் கட்டி முடிக்கப்பட்டு சுவாமி விவேகானந்தர் நினைவாக திறக்கப்பட்டது. அதன் பின்னர் படகு போக்குவரத்து துவங்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதியானது வழங்கப்பட்டது. இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்டிடக் கலையினை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. விவேகானந்தர் பாறை, இந்தியாவின் ஆன்மீக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பாறைக்கு வருகை புரிந்து செல்கின்றனர். விவேகானந்தரின் போதனைகளை பரப்புவதற்கும், இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு முக்கியமான மையமாக விளங்குகிறது.
விவேகானந்தரின் போதனைகள்:
* ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லவும், பக்குவப்படுத்தவும், மேன்மைப்படுத்தவும் தேவையானது ஒழுக்கம் என்பதை போதித்தவர்
* 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்தியாவை உலகளவில் உயர்த்திக் காட்டுகிறேன் என்று சூளுரைத்தவர்.
* தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலை சிறந்த மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தியவர்.
இவ்வாறு பல்வேறு போதனைகளை போதித்த ஆன்மீகவாதியான சுவாமி விவேகானந்தனர் தியானம் செய்ய உகந்த இடமாக தேர்ந்தெடுத்தது தமிழகத்தின் தென்கோடியில் கடலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு பாறையை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள அந்த பாறை விவேகானந்தர் பாறை என்ற பெருமைக்குரியது.