சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கடுக்காய் பொடி , சுண்ணாம்பு கலவை பூசும் பணி தொடங்கியது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஐயன் வள்ளுவரின் புகழை அறிந்து கொள்ளும் விதமாக கன்னியாகுமரி கடலில் 2000ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆண்டு ஒன்றிற்கு சுமார் 25 லட்சத்திற்க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலையை பார்வையிடுகின்றனர்.
திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் சேதம் அடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இறுதியாக 2017 ஆம் ஆண்டு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக இப்பணி தொடங்கவில்லை.
இந்நிலையில் ரூபாய் ஒரு கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி துவங்கப்பட்டது. சுமார் 75 டன் அளவில் இரும்பு பைப்புகள் மூலம் திருவள்ளூர் சிலையை சுற்றி சாரம் அமைக்கும் பணி நடைபெற்று அது முடிவுற்ற நிலையில் தற்போது சிலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருக்க கூடிய வெடிப்புகளை சரி செய்யும் விதமாக தொல்லியல் துறையின் ஆலோசனையின் படி சுண்ணாம்பு கடுக்காய் கருப்பட்டி ஆகியவற்றின் துகள்களை கொண்டு சிலைக்கு சுண்ணாம்பு கலவை பூசுமணியானது நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது இன்னும் இரண்டு வாரங்கள் நடைபெறும். அதன் பிறகு சிலையில் படிந்திருக்கும் உப்புத் தன்மையை நீக்கும் விதமாக சிலை முழுவதும் காகிதக்கூழ் ஒட்டப்படும். இந்த பணி இரண்டு வாரங்கள் நடைபெற்ற பின்னர் மீண்டும் சிலை முழுவதும் கெமிக்கல் வாட்டர் வாஷ் செய்யப்பட்டு அதன் பிறகு ஜெர்மன் நாட்டிலிருந்து பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்டுள்ள பாலி சிலிக்கான் எனும் ரசாயனம் மூலம் சிலை முழுவதும் ஸ்பிரே செய்யப்பட்டு சிலை சுத்தம் செய்யப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் நவம்பர் இறுதியில் நிறைவுற்று திருவள்ளூர் சிலையை காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுபவார்கள் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.