தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுணில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், வியாபாரிகளின் நலன் சார்ந்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா கூறும் பொழுது, மத்திய அரசு 47-வது கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அரிசி, பருப்பு, பால், தயிர் போன்ற உணவுப் பொருட்கள் மீதான ஐந்து சதவீதம் வரிவிதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முடிவெடுத்தோம். அடுத்து மதுரையில் நடத்தப்படும் கவுன்சில் கூட்டத்தின் போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளோம். ஆனால் மதுரையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிந்து கொண்டோம். அங்கே கவுன்சில் கூட்டம் நடைபெறும் பொழுது இதே நிலை நீடிக்குமானால் அதே போராட்டத்தை நெல்லை மாவட்டத்தில் 15,000 வணிகர்களை திரட்டி மாபெரும் போராட்டமாக நடத்துவோம் என தீர்மானித்துள்ளோம். அதே போல தமிழக முதலமைச்சர் 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்கலாம் என அறிவித்திருந்த நிலையிலும் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதலமைச்சரின் அறிவிப்பு படி கடைகளை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறோம்.
நெல்லை - அம்பாசமுத்திரம் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையை விரைவாக போடுவதற்கு துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் தர உள்ளோம். நெல்லை பேருந்து நிலையங்களை ஸ்மார்ட் சிட்டி என்ற அடிப்படையில் கடைகளை காலி செய்து விரைவாக கட்டி கடையை நடத்துகிறவர்களுக்கே சரியான வாடகை நிர்ணயம் செய்து பழைய நபர்களுக்கே கடைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதே போன்று தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை எந்த வியாபாரிகளும் கடைகளில் அனுமதிக்க கூடாது விற்பனை செய்யக்கூடாது என பேரமைப்பு வியாபாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்யும் போது ஊடகங்களை அழைத்து சென்று ஆய்வு நடத்தி உடனடியாக சீல் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என துறை அமைச்சரிடம் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். காரணம், உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொருள் தரம் இல்லை என்றால் மட்டுமே சீல் வைக்க வேண்டுமே தவிர எடுத்த எடுப்பிலே சீல் வைப்பு என்பது அறவே இருக்கக்கூடாது என்பதை பேரமைப்பு வலியுறுத்துகிறது.
39 பொருட்களுக்கு மாநில அரசு புதிதாக செஸ் வரி விதித்துள்ளது, இதனை திரும்ப பெற வலியுறுத்தி அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க இருக்கிறோம். தொடர்ந்து முதலமைச்சர் சந்தித்து அந்த வரி விதிப்பை நீக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். இரண்டு ஆண்டுகள் கொரோனாவினால் பாதிப்பை சந்தித்த வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பண்டிகை காலங்களில் எந்த நிபந்தனையும் இல்லாமல் முழு தளர்வுகளை அறிவித்து கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். பட்டாசு உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி பெறும் நிலையை மாற்றி முன்பே அனுமதியை வழங்க வேண்டும் என பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு சார்பில் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம் என தெரிவித்தார்.