கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல், தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஞாயிற்று கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தேவாலயம் செல்லும் நபர்களின் வீடுகளை மட்டும் குறி வைத்து அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக இருந்தது.  இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தது. ஆனால் கொள்ளையனை பிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக தடயங்களை விட்டு வைக்காத நிலைமையில் கொள்ளையர்கள் செயல்பட்டதால் காவல்துறையினர் விழி பிதுங்கி நின்றனர்.

 

இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி குமாரபுரம் பகுதியை சேர்ந்த வாழைத்தார் வியாபாரி சோமன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 65 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் மற்றும் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

 



 

தனிப்படை போலீசார் கொள்ளை போன பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளை நடந்த அனைத்து இடங்களிலும் வெள்ளை நிற ஆக்டிவா பைக்கில் ஹெல்மட் அணிந்து ஒருவர் வந்து செல்வது பதிவாகியிருந்தது. இந்த நிலையில் மேக்காமண்டபம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த வெள்ளை நிற ஆக்டிவா பைக்கை ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசிய அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

 

அந்த நபர் நெய்யூர் பகுதியை சேர்ந்த 36 வயதான ஸ்டீபன் என்பதும், கொத்தனார் வேலை பார்க்கும் இவர் தமிழகத்தில் கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், கேரளாவில் பத்தணம்திட்டா, சங்கணாசேரி, திருவல்லா போன்ற பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்ததும் கொள்ளையடிக்கும் பொருட்களை விற்று மும்பை சென்று விடுதி எடுத்து தங்கி அழகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி  இருப்பதும் தெரிய வந்தது .

 



 

தொடர் திருட்டு உல்லாச வாழ்க்கை என இருந்த ஸ்டீபன் இறுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் திருப்பூரில் சிக்கி பின் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியே வந்த ஸ்டீபன் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், தக்கலை சுற்றுவட்டார பகுதியில் 6 வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

 

இதனையடுத்து கொள்ளையன் ஸ்டீபனை கைது செய்த தனிப்படை போலீசார் கீழ கல்குறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து ஸ்டீபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண