நாடு முழுவதும் சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நடைமுறை பல துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் ஏற்கனவே தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெற்று இயங்கும் சூரிய சக்தியை மின் மோட்டார் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பெறப்படும் சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தி விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த பல திட்டங்களை வலியுறுத்தியது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மோட்டார் பெற விரும்பும் விவசாயிகள் தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மைப் பொறியியல் துறை தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைதிறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் ( 40 சதவீதம் தமிழகஅரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம் ) 2021-2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் தவணையாக 2000 சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ரூ .43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும் . இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசனஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்புசெட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும், பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும் போது சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர்பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர், தொழிற்பேட்டை, கோணம் (8903569359) மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை , உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பனங்காலவிளை . அழகியமண்டபம் (9443450727) அலுவலகங்களை அணுகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்