கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பாலில் குளிக்க சென்ற போது கால்வாயில் மூழ்கிய சமையல்காரரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர். அவரது நிலைமை என்னவென்று தெரியாததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி படுக்கபத்து கீழத்தெருவை சேர்ந்தவர் சித்திரைபாண்டி (வயது 52), சமையல்காரர். இவரது நண்பர் இசக்கி (37). இவர் சொந்தமாக லாரிகள் வைத்துள்ளார். இந்த லாரிகள் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் பகுதியில் ஜல்லி, மணல் எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த லாரிகளை பார்ப்பதற்காக இசக்கியும், சித்திரை பாண்டியும், வீரபாண்டியன் என்பவரும் நேற்று சீதப்பால் பகுதிக்கு வந்தனர். பின்னர் மூவரும் அவ்வையார் அம்மன் கோவில் அருகே தோவாளை கால்வாயில் குளிக்க சென்றனர். முதலில் சித்திரை பாண்டி கால்வாயில் இறங்கியுள்ளார். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அவர் நண்பர்கள் கண்முன்னே தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.
இதை பார்த்து கரையில் நின்ற இருவரும் கூச்சல் போட்டனர். சிறிது நேரத்தில் சித்திரை பாண்டி தண்ணீரில் முழ்கி மாயமானார். இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி முகமது சலீம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கால்வாயில் இறங்கி தேடினர். ஆனால், சித்திரை பாண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருள் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. சித்திரை பாண்டியின் கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்