மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி 25-ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

 

அப்போது கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்வார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

 



 

மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மாலை பூஜையும் விஸ்வரூம தரிசனம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், உஷ பூஜை, உஷதீபாராதனை, உச்சி கால பூஜை, உச்சிகால தீபாராதனை, பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, அன்னதானம் போன்றவை நடக்கிறது. மாலையில் சாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் ழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேல தாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.