கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தில் தரமற்ற மீன்களை பதப்படுத்தி வைக்க எந்தவித வசதியும் இல்லாமல் அழுகிய நிலையில் இருந்த 500 கிலோ மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்து மீன்களை அழித்தனர். மேலும், தனியார் உணவகத்தின் மீது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 





கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாகர்கோவில் மாநகர சுகாதார துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரிகள் உணவகத்தில் உள்ளே நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு நடந்த சோதனையில் தரமற்ற முறையில் மீன்கள் உணவகத்தில் இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் இந்த மீன் கடை அந்த பகுதியில் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது தெரியவந்துள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





உணவகத்தில் உள்ள சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த அந்த மீன்களை பதப்படுத்த எந்தவித வசதியும் இல்லாமல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உணவு ஒவ்வாமை ஏற்படுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இது போன்ற தவறு செய்தால் கண்டிப்பாக சீல் வைக்கப்படும் என ஏச்சரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் இயங்கி வரும் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக சோதனை செய்யாமல் இருப்பதன் காரணம் ஏன் ? பல ஹோட்டல்கள் இது போன்ற தரமற்ற முறையில் உணவு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி வரும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.