குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேரை நியூஸிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 36 லட்சம் ரூபாய் கும்பல் மோசடி செய்தது. பணத்தை திரும்ப கேட்டு குமரி மாவட்ட ஏஜென்ட் வீட்டு முன் தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியை ஒட்டி உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேரிடம் சென்னை மண்ணடி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் மாலதி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து குமரி மாவட்ட ஏஜென்டான ரெஞ்சித் ஆகியோர் சேர்ந்து கடந்த 2020 ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் கார்டன் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது என்றும் அதற்காக ஒரு ஆளுக்கு ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் மற்றும் பாஸ்போர்ட்களை வாங்கி உள்ளனர். விரைவில் விசா மற்றும் டிக்கெட் அனுப்பி தரப்படும் என்று கூறியவர்கள் ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து உள்ளனர். இதனையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் என்ன ஆனதென்று கேட்டபோது நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவை இல்லை என்றும் அதே வேலை அமெரிக்க நாட்டில் உள்ளது என்றும் அதற்கான விசா தங்களிடம் கைவசம் இருப்பதாக கூறி அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணத்தை செலுத்தி மெடிக்கல் எடுத்தால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பியவர்கள் உடனடியாக பணத்தை திரட்டி கொண்டு சென்னை சென்று நபர் ஒருவருக்கு 60 ஆயிரம் வீதம் செலுத்தி மெடிக்கல் எடுத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் 50 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக டிக்கெட் கிடைத்து நீங்கள் அமெரிக்கா செல்லாம் என்று கூற அதனையும் நம்பி கொடுத்தவர்கள் 15 தினங்கள் சென்னையில் தங்கி இருந்து காத்து இருந்துள்ளனர். இறுதியாக இன்னும் இரண்டு தினங்களில் டிக்கெட் வந்துவிடும் நீங்கள் உங்களது ஊர்களுக்கு சென்று வெளிநாடு செல்ல தேவையான வேலைகளை செய்ய கூறி மீண்டும் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர். ஊருக்கு வந்த அவர்கள் இன்று டிக்கெட் வரும் நாளை வரும் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து காத்திருந்த வேளையில் எந்த அறிவிப்பும் வராமல் இருந்ததால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்து மீண்டும் சென்னைக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளனர் ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்துள்ளது. அவர்களது எண்களுக்கு தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனையடுத்து டிராவல்ஸ் நடத்தி வரும் மாலதியின் வீடு அமைந்திருக்கும் வடபழனி பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வீடும் பூட்டி கிடந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது மாலதி மற்றும் அவரது கணவர் அனைவரையும் ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளனர் என்றும் யாரும் அவர்களிடம் பணத்தை கொடுத்து இனிமேல் ஏமாறாதீர்கள் என்று கூறி உள்ளனர். இதனால் விரக்தியடைந்த 25 பேரும் குமரி மாவட்டம் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமான டிராவல்ஸுடன் பழக்கம் ஏற்படுத்தி விட்டு பணத்தை வாங்கிய குமரி மாவட்ட ஏஜென்டான திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ரெஞ்சித் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி மாலதியிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் அப்போது பணத்தை நாளை காலை 10 மணிக்குள் வழங்குவதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்தபோது தாங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இவர்களிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மட்டுமே 36 லட்சம் ருபாய் மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.