கன்னியாகுமரி மாவட்டம் இராமநாதிச்சன் புதூர் அருகே குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசார் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் அனுப்பிய பள்ளி மாணவர்கள். மாணவர்களின் தகவலின் அடிப்படையில் சோதனை செய்தபோது 147 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டம் முழுவதும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் கொரியர் மூலமாகவும் ரெயில் மூலமாகவும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பொருட்கள் குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நடவடிக்கை மேற்கொண்டார். கஞ்சா மற்றும் குட்கா புகையிலை குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட போலீஸ் சார்பில் வாட்ஸ்அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது. 7010363173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உறுதி அளித்தார் இந்நிலையில் மாணவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு 7010363173 என்ற எண் மூலம் இராமநாதிச்சன்புதூர் அருகே குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாணவர்கள் தகவல் கொடுத்தனர்.
உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் அவர்களின் உத்தரவின் பெயரில் அஞ்சு கிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆகியோர் பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 147 பாக்கெட் குட்கா கைப்பற்றப்பட்டது. உடனே கைப்பற்றப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து அணிட் அலெக்சாண்டர் என்பவருடைய கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மற்றும் காவல் துறையினர் இணைந்து சீல் வைத்தனர்.